போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களைக் கௌரவிக்கும் நினைவுகூரல் நாள் நிகழ்வுகள், மொன்றியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த உணர்வுபூர்வமாகவும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடனும் அனுஷ்டிக்கப்பட்டன.
மொன்றியல் நகரின் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டூ கானடா (Place du Canada) மைதானத்தில் கனேடிய ஆயுதப் படைகளின் அதிகாரப்பூர்வ தலைமைச் சடங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டதுடன், குறைந்த உயரத்தில் பறந்த உலங்குவானூர்தி ஒன்றின் மூலமாகவும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, அவுட்ரிமோன்ட் (Outremont) பகுதியில் அமைந்துள்ள அவுட்ரிமோன்ட் பூங்காவில் உள்ள நினைவுத் தூபிக்கு அருகில் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
மொன்றியலின் பழமையான பிரெஞ்சு மொழிப் படைப்பிரிவான ‘The Fusiliers Mont-Royal’ அமைப்பினரும், பல முன்னாள் போர் வீரர்களும் இதில் கலந்துகொண்டனர்.
வெஸ்ட் தீவுப் பகுதியில் உள்ள பாயிண்ட்-கிளையர் (Pointe-Claire) நினைவுக் களத்தில், ‘No Stone Left Alone’ அமைப்பின் ஏற்பாட்டில் இளைய தலைமுறையினர் போர் வீரர்களின் கல்லறைகளில் போப்பி (Poppy) மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், லாவல், டெர்போன், தெற்கு கரை மற்றும் ஷெர்பூக் உள்ளிட்ட மொன்றியலைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் றோயல் கனேடிய லீஜன் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
