கியூபெக் மாகாணத்தில் உள்ள லவால் (Laval) நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது ஆண் துணையாளரை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் குறித்த பெண்ணின் உடலைக் கைப்பற்றியதுடன், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் ஆண் துணையாளரை சம்பவ இடத்திலேயே பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் பொலிஸ் புலனாய்வாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சோதனைகளை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த குடியிருப்புப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துள்ள பொலிஸார், மோப்ப நாய் உதவியுடன் சான்றுகளைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
“இறந்த பெண்ணின் உடலில் காயங்கள் மற்றும் வன்முறைத் தாக்குதலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.” எனவும் மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்த ஆரம்பக்கட்ட விசாரணைகள் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளன” எனவும் பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

