வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கில் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அந்த வழக்கின் தீர்ப்புப் பிரதியை வழங்குவதற்காக சந்தேகநபர் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி 500 ரூபாய் இலஞ்சப் பணத்தை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், சந்தேகநபரை நேற்று, அதாவது 16ஆம் திகதி பிற்பகல் 3.35 மணியளவில், கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


