கியூபெக் மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகள் (preschools) மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் (elementary schools) வகுப்பறை நிர்வாகம், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறப்பு உதவி தேவைப்படும் மாணவர்களின் அதிகரிப்பு குறித்து மாகாண கணக்காய்வாளர் நாயகம் விரிவான விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளார்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கற்றல் சூழலின் தரம் குறித்து மதிப்பீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கியூபெக் பள்ளிகளில் அண்மைய காலமாக ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களுக்கு எதிரான வன்முறைகள், வாய்மொழி அச்சுறுத்தல்கள் மற்றும் ஒழுங்கீனச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பல்வேறு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரித்து வருகின்றன.
அத்துடன், தனிப்பட்ட கல்வித் திட்டங்கள் அல்லது சிறப்புத் தலையீட்டுத் திட்டங்கள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை வகுப்பறை நிர்வாகத்தில் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.
இத்தகைய பின்னணியில், தற்போதைய வகுப்பறைச் சூழல் மாணவர்களின் கற்றலுக்கு உகந்ததாக உள்ளதா என்பதைத் தீர்மானிப்பதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.
கணக்காய்வாளர் நாயகத்தின் இந்த அதிரடி விசாரணை முடிவை மாகாணத்தின் கல்வியாளர்களும் ஆசிரியர் அமைப்புகளும் வரவேற்றுள்ளன.

