கியூபெக் மாகாணத்தில் 92 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள புதிய தேசிய வரலாற்று அருங்காட்சியகமானது, மாகாணத்தின் பழங்குடியின மக்களையும் ஆங்கிலம் பேசும் சிறுபான்மைச் சமூகத்தினரையும் முறையற்ற வகையில் புறக்கணிப்பதாகப் பலத்த சர்ச்சை உருவாகியுள்ளது.
17-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஆய்வாளர்களின் வருகையுடன் தான் கியூபெக்கின் வரலாறே தொடங்கியது என்ற மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு, பழங்குடியின தலைவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பியர்களின் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழங்குடியின மக்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றதாகவும் அவர்களின் பங்கை மறைப்பது மற்றும் காலனித்துவ மனோபாவத்தை’ மீண்டும் திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கியூபெக்-லாப்ரடார் முதல் தேசங்களின் பேரவை தெரிவித்துள்ளது.
பேரவையின் தலைவர் கிஸ்லைன் பிக்கார்ட் (Ghislain Picard) இக்கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கியூபெக் அரசாங்கம் தனது திட்டத்தை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளது.
சில வார்த்தைப் பயன்பாடுகள் பழங்குடியின மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட கியூபெக் கலாசார அமைச்சர் அந்த அருங்காட்சியகத்தின் கண்காட்சிப் பொருட்கள் மற்றும் பாடத்திட்டங்கள் சுயாதீன நிபுணர் குழுவின் வழிகாட்டலிலேயே தீர்மானிக்கப்படும் என்றும், பழங்குடியினரின் வரலாறு முற்றாகத் தவிர்க்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

