உலகின் இரு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களுக்கு இடையே இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்க AI நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை சீன AI நிறுவனங்கள் தீங்கிழைக்கும் வகையில் நகலெடுத்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
‘டிஸ்டிலேஷன்’ (distillation) எனப்படும் நுட்பத்தின் மூலம் சீன நிறுவனங்கள் அமெரிக்க AI ஆய்வகங்களின் அறிவுசார் சொத்துக்களை நகலெடுத்துள்ளதாக அமெரிக்க சட்ட அமுலாக்க மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கை தெரிவிக்கிறது. பெரிய மற்றும் அதிக செலவுமிக்க AI மாடல்களின் முடிவுகளைப் (outputs) பயன்படுத்தி சிறிய AI மாடல்களுக்குப் பயிற்சியளிக்கும் செயல்முறையே ‘டிஸ்டிலேஷன்’ ஆகும்.
DeepSeek, Moonshot AI மற்றும் Alibaba உள்ளிட்ட ஆறு சீன நிறுவனங்கள், தங்கள் AI தயாரிப்புகளுக்கு விரைவாகப் பயிற்சியளிப்பதற்காக சீன அரசாங்கத்தின் அறிவோடு, அமெரிக்கத் தயாரிப்பு AI மாடல்களின் பதிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர். Anthropic, OpenAI, Alphabet-இன் Google மற்றும் SpaceX ஆகியவற்றின் AI மாடல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயல்முறை சீன AI நிறுவனங்களின் செலவைக் குறைப்பது மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய சீனாவின் இராணுவ மற்றும் சைபர் தாக்குதல் திறன்களையும் அதிகரிப்பதாக அமெரிக்க அறிக்கை கூறியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இக்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரப்பூர்வமான அடிப்படையும் இல்லை என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா இரட்டை நிலப்பாடு வகிப்பதாகவும், இயல்பான வர்த்தக நடவடிக்கைகளில் தலையிட்டு போட்டியை ஒடுக்க முயல்வதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.
டிஸ்டிலேஷன் என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப முறை எனக் குறிப்பிட்ட அமைச்சகம், சில அமெரிக்க நிறுவனங்களும் சீன மாடல்களை டிஸ்டில் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. டிஸ்டிலேஷனைக் கட்டுப்படுத்துவதை சாக்காகப் பயன்படுத்தி சீன நிறுவனங்களை ஒடுக்க முயன்றால், பதிலடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதையும் அவதூறு பரப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், AI துறையில் முக்கிய வல்லரசுகளாக விளங்கும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

