தமிழ்நாடு காவல் துறையில் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த 15 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிட மாற்றங்களை வழங்கி தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் (Home Department) அரசாணை வெளியிட்டுள்ளார்.
முதன்மை கட்டப் பயிற்சிகளை நிறைவு செய்துள்ள இந்த உதவிக்காவல் கண்காணிப்பாளர் (ASP) நிலையிலான அதிகாரிகளுக்கு, மாநிலத்தின் முக்கிய நகர்ப்புற மற்றும் ஊரக உட்கோட்டங்களில் களப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பணியிட மாற்றத்தின்படி, ஏ. நாயர் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவிக்காவல் கண்காணிப்பாளராகவும், பி. அங்கிதா தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டத்திற்கும், எஸ். அஸ்வினி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பிஸ்வாஜித் பண்டா திருநெல்வேலி ஊரகப் பகுதிக்கும், டிஜே. சத்ரிய கவின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கும், எஸ். இன்பா திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், பி. மஞ்சுமா திண்டுக்கல் ஊரக உட்கோட்டத்திற்கும், மண்ணம் சுஜித் சம்பத் ராசிபுரத்திற்கும், நீல் சர்மா கோவில்பட்டிக்கும், கே. நேகா ராமநாதபுரத்திற்கும், பிரியங்கா பார்கவ் நாகப்பட்டினத்திற்கும் புதிய ஏஎஸ்பி-க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை ஊரக உட்கோட்டத்திற்கு ராகுல் வி கோபால், ராஜபாளையத்திற்கு சைந்தானே ஸ்வப்னிலா அனில், மதுரை ஊமச்சிகுளத்திற்கு தனூ சிங் மற்றும் மதுரை மாநகர் அண்ணா நகர் சரகத்திற்கு ஆஷிஷ் புனியா ஆகிய அதிகாரிகளும் பொறுப்பேற்கவுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் உடனடி அமலுக்கு வரும் வகையில் இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

