சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியின் ‘செயற்பாட்டு வரைவு’ அறிக்கையை வெளியிட்டார்.
இந்த அறிக்கையில் தமிழக நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களை முன்மொழிந்து, மாநிலத்திற்கு ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரமாகவும், சென்னை தொழில்நுட்பத் தலைநகரமாகவும், கோவை தொழில் தலைநகரமாகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகரமாகவும், திருச்சி நிர்வாகத் தலைநகரமாகவும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை இந்நகரங்களுக்கு இடையே மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களில், பெண்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழைய வாக்குச் சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 சதவீத வாக்குப்பதிவு கட்டாயமாக்கப்பட்டு, அரசின் சலுகைகளை பெற வாக்களித்ததற்கான சான்றிதழ் அவசியமாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பாக, “இனி படிக்காதவர் எவருமில்லை” என்ற இலக்குடன் தகுதியுள்ள அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலனுக்காக, குடிநீர் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதித்து, இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூழலியல் திட்டங்களின் கீழ், பல கோடி பனைமரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பனைமரம் தமிழகத்தின் தேசிய மரமாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மாநில உரிமைகள் தொடர்பாக, மத்திய அரசுக்கு 25 சதவீதமும், மாநில அரசுக்கு 75 சதவீதமும் வரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றும், மாநில அதிகாரங்களை அதிகரிக்க சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, “மக்களின் கருத்துக்கு ஒரு அரசு இயங்க முடியாது; மக்களின் நலனுக்காக மட்டுமே இயங்க முடியும்” என தெரிவித்த சீமான், தனது ஆட்சி “தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி” ஆக இருக்கும் என கூறினார்.
