செஞ்சிலுவை சர்வதேசக் குழுவானது (ஐ.சி.ஆர்.சி.), ஆயுத மோதல், வன்முறை, அனர்த்தங்கள், புலம்பெயர்வு ஆகியவற்றின் காரணமாக, காணாமல் போன அல்லது தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட உலகெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கானவர்களை ஆகஸ்ட் 30ஆம் திகதி கௌரவப்படுத்தியதுடன், தமது அன்புக்குரியவர்களுக்கு நேர்ந்த கதியை அறியாது வலியில் வாடும் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது.
இலங்கையில், சகல சமூகங்களையும் சேர்ந்த காணாமல் போனவர்களின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது மற்றும் அவர்கள் எங்குள்ளார்கள் என்பதற்கான விடை தெரியாமல் காத்திருக்கின்றன. தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்குண்டு. துயரப்படவோ, முடிவொன்றைக் காணவோ, தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவோ முடியாத நிலையில், காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் பிரசன்னமின்மையாலும் அதனோடு வரக்கூடிய நிச்சயமற்ற தன்மையாலும் எழக்கூடிய மனவெழுச்சிசார், பொருளாதார, சட்ட, நிர்வாக, மற்றும் சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்ளவதில் இக்குடும்பங்கள் அடிக்கடி சிரமங்களை எதிர்கொள்கின்றன.
காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களது தேவைகளை நிறைவேற்றுதல் என்பது சிக்கலானதும் பன்முகங்களைக் கொண்டதுமான நடைமுறையாகும். இந்தக் குடும்பத்தவர்கள் இச்செயன்முறையின் நடுநாயகமாகவும் பிரதான பங்குதாரர்களாகவும் உரித்துடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். இவர்களது தேவைகளுக்குப் பதிலிறுக்கும் முதன்மைப் பொறுப்பு தேசிய அதிகாரத் தரப்பினரைச் சார்ந்திருக்கும் அதேவேளை, இந்தக் குடும்பங்களின் பன்முகத் தேவைகளுக்குப் பதிலிறுப்பதற்கு உதவக் கூடிய பரிபூரண சட்டகமொன்றைக் கட்டமைப்பதனூடாக பரந்தளவிலான, நிலைத்து நிற்கக்கூடிய பதிலிறுப்பு நடவடிக்கைகளில் உள்ளுர் பங்குடைமையாளர்கள் பங்களிப்பு வழங்க முடியும். இதன் மையப்புள்ளியாக அமைவது யாதெனில், பல்தரப்பட்ட பங்குடைமையாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உள்ளடக்கி, காணாமல் போனவருக்கு நேர்ந்த கதியையும் அவர் எங்கிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்துவதனை நோக்கிய முக்கிய படிமுறையான ‘தேடுதல்’ ஆகும்.
இலங்கையில் தற்பொழுது செஞ்சிலுவை சர்வதேசக் குழு ‘காணாமல் போனவர்கள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்தி வருகிறது. காணாமல் போனவர்களுக்கு நேர்ந்த கதியையும் அவர்கள் எங்கிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளித்தல், தேசிய மற்றும் உள்ளுர் மட்டங்களிலுள்ள திறன்களை பலப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைந்ததும் அரசால் வழிநடத்தப்படுகின்றதும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டதுமான முயற்சிகளை முன்னெடுத்தல் என்பவற்றின்மூலம் காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரத்தில் நிலைத்தகு பதிலிறுப்பை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
காணாமல் போனவர்கள் விவகாரத்துக்குப் பதிலிறுப்பது, சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் இன்றியமையாததாகும். தீர்வு காணப்படாமல் நிலுவையிலுள்ள முறைப்பாடுகள், மோதல் முடிவடைந்து நீண்ட காலத்துக்குப் பின்னரும் மன உளைச்சலைத் தொடரச் செய்து, மனத்தாங்கல்களை ஆழப்படுத்தி, சமூகங்கள் தமது வடுக்களிலிருந்து மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புதலைப் பாதிக்கும். ஆயுத மோதலொன்று முடிவடைந்து பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும்கூட, இப்பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வை ஏற்படுத்துவதற்கு நிலைத்தகு அரசியல் உறுதிப்பாடு அவசியமாகும்.

