அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு எதிராக வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்டசெயலகம் முன்பாக இன்று காலை இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கைதடியில் உள்ள வடமாகாண சபை அலுவலகத்தின் முன்பாக இன்று பாரிய ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் வவுனியாவில் இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்
வட மாகாணத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மிகவும் தரக்குறைவாக, இழிவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி பாரிய களங்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டினை செய்திருக்கிறார்கள்.
அரச சேவையில் இருந்துகொண்டே அந்த கட்டமைப்பிற்குள் இருக்கின்ற இன்னுமொரு சேவையினை மலினப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர். இதற்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசேவையில் பதவியைவிட பரஸ்பர மரியாதையே முக்கியம், சேவையில் அவமதிப்பு வேண்டாம், நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா போன்ற வாசகங்களை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர். இதேவேளை தமது கோரிக்கைகள் அடங்கிய மகயரை மாவட்ட அரச அதிபருக்கும் வழங்கியிருந்தனர்.

