முன்னாள் அமெரிக்க அதிபரான 83 வயதான ஜோ பைடனுக்குக் கண்டறியப்பட்ட புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 மே மாதம் ஜோ பைடனுக்குக் கடுமையான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதால் (Metastasis) அவர் கடுமையான வலியினாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பைடனின் திசு பரிசோதனையில் புற்றுநோயின் மிகத் தீவிரமான நிலையை உணர்த்தும் ‘கிளீசன் ஸ்கோர் 9’ (Grade Group 5) பதிவாகியுள்ளது.
கதிர்வீச்சு (Radiation) மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த போதிலும், புற்றுநோய் செல்கள் எலும்புகளையும் தாண்டிப் பரவி அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன. தன் தந்தை கடுமையான வலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது வேதனையாக இருந்தாலும், அவர் மன உறுதியோடு தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக ஹண்டர் பைடன் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக புரோஸ்டேட் பகுதியில் உருவாகும் புற்றுநோய் செல்கள் தீவிரமடையும்போது இடுப்பு மற்றும் தொடை எலும்புகளைப் பாதித்து கடுமையான வலி, எலும்பு முறிவு மற்றும் நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
தற்போது புற்றுநோய் எலும்புகளுக்குப் பரவிவிட்ட நிலையில், நோயைக் குணப்படுத்துவதை விடவும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதையும் வலியைக் குறைப்பதையுமே முதன்மை சிகிச்சையாக மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புற்றுநோய் செல்கள் வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனைத் தடுக்கும் சிகிச்சைகளும், பிஸ்ஃபோஸ்ஃபோனேட்ஸ் போன்ற வலிநிவாரணி மருந்துகளும் அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வயது முதிர்வு மற்றும் நோயின் தீவிரம் காரணமாக முன்னாள் அதிபர் ஜோ பைடன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

