மொன்றியல் – செயின்ட் லோரன்ஸ் ஆற்றில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் முயற்சி ஒன்றில் விஞ்ஞானிகள், கடல் ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.
கடல் உயிரியல் நிபுணரான லைன் மொரிசெட், திமிங்கிலங்கள், ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்படுவதை தொடர்ந்து அவதானித்து வந்த நிலையில், வெறுமனே பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு பதிலாக நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், செயின்ட் லோரன்ஸ் ஆற்றின் கரையோரங்களில் இருந்து 10 டன் குப்பைகளை அகற்றும் இலக்குடன் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது அது “Mission 1,000 tonnes” எனப்படும் மிகப்பெரிய திட்டமாக விரிவடைந்துள்ளது.
இந்த ஆண்டில், விஞ்ஞானிகள், நீர்மூழ்கல் நிபுணர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு ஒன்று, சுமார் 2,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து, 16 நாட்கள் செயின்ட் லோரன்ஸ் ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபடுகிறது.
L’Expédition Saint-Laurent என அழைக்கப்படும் இந்தப் பயணத்தில், மொன்றியால் மற்றும் கியூபெக் நகரப் பகுதிகள் மட்டுமன்றி, பே-கோமோ மற்றும் வடக்குக் கரையோரத்தில் உள்ள பெசாமிட் இனு சமூகமும் இணைந்துள்ளது.
உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து ஆற்றின் கரையோரங்களில் குவிந்துள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பெருமளவிலான குப்பைகளை அகற்றுவது ஒருபுறம் திருப்தியை அளித்தாலும், மறுபுறம் ஆற்றில் இவ்வளவு குப்பைகள் தேங்கியிருப்பதைப் பார்ப்பது வேதனையளிப்பதாக லைன் மொரிசெட் தெரிவித்துள்ளார்.
செயின்ட் லோரன்ஸ் ஆற்றையும் அதனைச் சார்ந்துள்ள கடல் உயிரினங்களையும் பாதுகாப்பதே இந்தப் பெரும் சுற்றுச்சூழல் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.


