மொன்றியலின் பிரதான பொதுப் போக்குவரத்துச் சேவையான REM இலகு ரயில் சேவையில், பயணி ஒருவரிடம் துப்பாக்கி இருந்ததாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து பயணிகள் மத்தியில் கடும் பீதி நிலவியது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மொன்றியல் பொலிஸார் ரயிலை இடைமறித்துச் சோதனையிட்டனர்.
அந்த ரயிலில் பயணித்த 19 வயதான இளைஞன் ஒருவரிடம் இருந்த அந்தத் துப்பாக்கி, உண்மையானது அல்ல என்பதும், அது காற்றழுத்த மூலம் இயங்கும் ஒரு போலி ‘ஏர்சாஃப்ட்’ (Airsoft gun) துப்பாக்கி என்பதும் சோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், அந்த இளைஞன் பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கோடோ அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணத்தோடோ அதனை வைத்திருக்கவில்லை எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
