கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘CUSMA’ எனப்படும் சுதந்திர வர்த்தக
உடன்படிக்கை தற்போதைய வடிவத்தில் நீடிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒப்பந்த விதிகளின்படி, தங்களுக்குள் நிலவும் வர்த்தக உடன்படிக்கையை மேலும் 16 ஆண்டுகளுக்கு, அதாவது 2042-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க விருப்பமா அல்லது விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பதை மூன்று நாடுகளும் அறிவிப்பதற்கான இறுதி கெடு இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer), கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் மற்றும் மெக்சிகோவின் பொருளாதாரச் செயலாளர் ஆகியோருடன் அவசர இணையவழி பேச்சுவார்த்தையை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா தற்போதைய வடிவத்திலான ஒப்பந்த நீட்டிப்பிற்கு உடன்படவில்லை என்று, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer), திட்டவட்டமாக அறிவித்தார். வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்தத்தின் குறைபாடுகளைக் களைவதற்கு, கனடா மற்றும் மெக்சிகோவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பால், வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இந்த CUSMA ஒப்பந்தம் உடனடியாக ரத்தாகிவிடாது என்பது நுகர்வோருக்கும் வர்த்தகத் துறையினருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


