வரலாற்றில் மிகக் கொடூரமான கல்வி நிறுவனத் துப்பாக்கிச் சூட்டுச் சமபவங்களில் ஒன்றான, ‘கான்கார்டியா பல்கலைக்கழகப் படுகொலையை‘ (Concordia University massacre) நிகழ்த்திய முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் (Valery Fabrikant), கியூபெக் மாகாணச் சிறைச்சாலையில் தனது 86 ஆவது வயதில் உயிரிழந்தார்.
உயிரிழந்த அவர், மொன்றியலில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு சக பேராசிரியர்கள் நால்வரைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார்.
கியூபெக்கின் செயின்ட்-அன்னே-டெஸ்-பிளைன்ஸ் (Sainte-Anne-des-Plaines) பகுதியில் உள்ள ‘ஆர்க்காம்போல்ட்’ மத்திய பாதுகாப்புச் சிறைச்சாலையில் உயிரிழந்த அவருடைய மரணம், “இயற்கையான காரணங்களால்” நிகழ்ந்துள்ளதாகக் கனடா சிறைச்சாலைத் துறை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
1993 ஜூன் 8 முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இவர், சிறையிலிருந்தபடியே பல வழக்குகளைத் தொடர்ந்து தொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.


