கியூபெக் மாகாணத்தில் உள்ள முன்னணி ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மொழிக் கொள்கைசார் பதற்ற நிலைமைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிமாகாண மற்றும் சர்வதேச மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக, மாகாண அரசு ஆண்டுதோறும் 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
மொண்ட்ரியலில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், கியூபெக்கின் உயர்கல்வித் துறை அமைச்சர் மார்ட்டின் பைரோன் (Martine Biron) மற்றும் ஆங்கிலப் பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் இந்த புதிய 8 ஆண்டுகாலப் பங்களிப்பு உடன்படிக்கையை (Eight-year deal) அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, மெக்கில் (McGill), கான்கோர்டியா (Concordia) மற்றும் பிஷப்ஸ் (Bishop’s) முதலான மூன்று முன்னணி ஆங்கிலப் பல்கலைக்கழகங்களுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு மாகாண அரசு ஆண்டுக்கு $20 மில்லியன் டொலர்கள் வரை நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.
இதற்கு ஈடாக, 2026 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் முதலாண்டில் இணையும் வெளிமாகாண இளநிலை மாணவர்களில் குறைந்தது 60 சதவீதமானோர், தங்களின் பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் போது, பிரெஞ்சு மொழிப் புலமையைக் கொண்டிருப்பதை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும் என, கியூபெக் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
அந்த பிரெஞ்சு மொழிப் புலமை ஆனது, கியூபெக்கின் மொழித் தகைமை அளவீட்டின்படி ‘நிலை 4’ மட்டத்தை எட்டி இருக்க வேண்டும் என, அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய இலக்கை அடைவதற்காக, அந்த மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


