நீண்டகாலமாக முழுமைப்படுத்தப்படாமல் காணப்படும் முல்லைத்தீவு பேருந்து மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகளை விரைவாக முழுமைப்படுத்தி, மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதியுடன் முழுமைப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் நீண்டகாலமாக தொடர்கின்றன.
ஏறத்தாள ஏழு வருடங்களாக இந்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அறிகின்றோம்.
எனினும் இதுவரை குறித்த பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முடிவுறுத்தப்படவில்லை.
எனவே முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகளை விரைவாக முடிவுறுத்தி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட வேண்டும்.
எப்போது இந்தப் பேருந்து நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முழுமையாக முடிவுறுத்தப்பட்டு, மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,
குறித்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையம் அமைப்பதற்குரிய திட்டமிடல்கள் கடந்த 2017,2018,2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு குறித்த மத்திய பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பேருந்து நிலையத்தை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து தற்போது முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தினை அமைப்பதற்குரிய நிதி ஒதுக்கிடுகள் செய்யப்பட்டு, கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் குறித்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 14.08.2026 ஆம் திகதியுடன் முழுமைப்படுத்தப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் இதன்போது பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
