நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் தற்போது நிலவி வரும் மழைக்காலநிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டு திணைக்களம் இந்த விபரங்களைக் குறிப்பிட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்த்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
