வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இவ்விடயம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஏற்கனவே அதிகாரிகளினதும் தவிசாளரினதும் பயன்பாட்டிற்காக ஒரு சிங்கிள் கப் ரக வாகனமும் , ஒரு முச்சக்கர வண்டியும் பயன்பாட்டில் உள்ளன. இதற்கு முன்னர் பதவியில் இருந்த தவிசாளர்கள் இந்த வாகனங்களையே பயன்படுத்தி வந்தனர்.
இது தவிர மேலதிக தேவைக்காக அரசாங்க அதிபரினால் மற்றுமொரு பிக்கப் ரக வாகனமும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது பதவியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தவிசாளர் புதிய வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாகன ஒப்பந்தத்தில், குறித்த வாகனத்தின் மாதாந்த வாடகை 3000 கிலோமீட்டர் வரையான தூரத்துக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் இலங்கை ரூபாய் எனவும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத் தாண்டினால் மேலதிக கட்டணமாக ஒரு கிலோமீட்டருக்கு 150 இலங்கை ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஓராண்டு காலப்பகுதிக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜந்து மாதங்களில் மாத்திரம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வாடகைக்கு அமர்த்திய வாகனத்திற்காக 17லட்சத்து 24,750 இலங்கை ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
