ஒரு நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மேரி-ஈவ் ஜிரார்ட் (Marie-Ève Girard) என்ற இயற்கை மருத்துவருக்கு (Naturopath) 15,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நோயாளி கடந்த 2021-ஆம் ஆண்டு மனநலப் பாதிப்பால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகின்றது.
அந்த நோயாளிக்கு இயற்கை மருத்துவம் அளித்து வந்த ஜிரார்ட், முறையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கவில்லை என்றும், அவரது தொழில்முறை எல்லைகளை மீறிச் செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.
கியூபெக் இயற்கை மருத்துவர்கள் சங்கத்தின் (ANPQ) ஒழுங்குமுறை குழு நடத்திய விசாரணையில், ஜிரார்ட் தன் மீதான நான்கு முக்கிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மேரி-ஈவ் ஜிரார்ட் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத சிகிச்சைகளையும், மருந்துகளையும் மனநலப் பாதிப்புள்ள நோயாளிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
நோயாளியின் மனநிலை மோசமடைந்த நிலையிலும், தாம் அவரை ஒரு மனநல மருத்துவரிடமோ அல்லது தகுதியான மருத்துவ நிபுணரிடமோ அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தவில்லை. என, மேரி-ஈவ் ஜிரார்ட் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த விதிமீறல்களை ஒரு “கடுமையான தொழில்முறை குற்றம்” என்று கருதிய ஒழுங்குமுறை குழு, அவருக்கு 15,000 டொலர் அபராதம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
