Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் டித்வா பேரிடரால் குவிக்கப்பட்ட மணலை அகற்ற வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி மோசடி

ஏப்ரல் 18, 2026
படிக்க 7 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாகத் தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கும், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்கு பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18) சனிக்கிழமை காலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான  உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு மற்றும் விநியோகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அரச திணைக்களங்களுக்கு இடையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாமையே பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வழங்கப்பட்ட சில அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன. மணல் அகழ்வு செய்யப்பட்ட இடங்கள் மிக மோசமான சுற்றாடல் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக   அமைய வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய  ஆளுநர் அவர்கள், நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே மணல் உள்ளிட்ட கனிய வளங்களின் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழுவொன்று அவசியம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளேன்.

ஆனால், அப்போதிருந்த சில அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் இயங்கிய சில அரச நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைக்க மறுத்தன. நான் ஆளுநராக பதவியேற்றது முதல் மணல் விநியோகம் தொடர்பான விடயங்களை மிக நுணுக்கமாக அவதானித்து வருகின்றேன்.

ஈவு இரக்கமற்ற விதத்தில் இங்கு மணல் மாபியாக்கள் செயற்பட்டு வருகின்றனர். ஒரு சில குழுக்களே மணலுக்கான விலையைத் தீர்மானிக்கின்றன. இவர்களுக்குச் சில அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

 அரசாங்கக் காணிகளில் அகழப்படும் மணலை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கினாலும் பரவாயில்லை.ஆனால் இவர்கள் ஒரு டிப்பர்  மணல் விற்பனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் உழைக்கின்றனர். குறிப்பிட்ட ஒரே குழுவினரே அகழ்வு மற்றும் விநியோகத்துக்கான அனுமதிப்பத்திரங்களை ஏகபோகமாகப் பெற்றுக்கொள்கின்றனர்.
அவர்களுக்கு வழங்குவதற்கே சில அதிகாரிகளும் விரும்புகின்றனர். இந்த மோசமான செயற்பாட்டால் அரசாங்கத்துக்குப் நிதியிழப்பு ஏற்படுகிறது.

மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தான் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவரை அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தேன்.

அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாகவே இன்று இந்த மாவட்ட மட்டக் கூட்டம் நடத்தப்படுகிறது. மணல் விநியோகம் மற்றும் மணல் விலை ஆகியவற்றை மாவட்டச் செயலாளர் தலைமையிலான இந்தக் கூட்டத்திலேயே தீர்மானிக்க வேண்டும் என ஆளுநர் செயலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைத்து திணைக்களங்களும் நிபந்தனையின்றி ஒத்துழைக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்  உபாலி சமரசிங்க, இங்கு நடப்பது சாதாரண மணல் வியாபாரம் அல்ல. ஒரு திட்டமிட்ட மணல் மாபியா. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த மணல் மாபியாக்களின் பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களுக்கு யார் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள் என்பதை நான் தீவிரமாக அவதானித்து வருகின்றேன். அவர்கள் இனியாவது இவற்றைக் கைவிட வேண்டும்; இல்லையெனில், நாங்கள் அதனை நிரந்தரமாக நிறுத்துவோம். நாங்கள் இந்த விடயத்தைச் சீர்செய்யவே முயற்சிக்கின்றோம். இதற்கு இங்குள்ள அனைத்துத் திணைக்களங்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைக்க மறுத்தால், மாண்புமிகு ஜனாதிபதியுடன் இணைந்து அமைச்சு மட்டத்தில் எடுக்க வேண்டிய மிகக் கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுப்போம். இங்குள்ள சில அதிகாரிகளுக்கு ‘டிப்பரால் இடித்துக் கொலை செய்து விடுவார்களோ’ என்ற அச்சமும் காணப்படுகின்றது.

மணல் அனுமதி தொடர்பான அதிகாரங்கள் தமக்கு மட்டுமே உள்ளதாகக் கருதி எந்த ஒரு திணைக்களமும் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. சகலரும் ஒருங்கிணைந்து தான் செயல்பட வேண்டும். வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை தொகுத்துப் பார்த்தால், அவை ஒரு சிலரின் பெயர்களில் தான் முடங்கியுள்ளன. இங்கு அனுமதி வழங்காவிட்டால் கொழும்பில் சென்று அனுமதியைப் பெற்று வருகின்றார்கள். எதிர்வரும் காலங்களில் மாவட்ட மட்டக் கூட்டத்தில்தான் இவை அனைத்தும் தீர்மானிக்கப்பட்டு செயற்படுத்தப்படும், என்றார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட 5 அனுமதிப்பத்திரங்கள் ஊடாக அண்ணளவாக 9,000 கியூப் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட கள ஆய்வு தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. இது தொடர்பில் நீண்ட வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

‘டித்வா’ இயற்கைப் பேரிடரால் குவிக்கப்பட்ட மணலை அகற்றுதல் என்ற அடிப்படையிலேயே குறித்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடை பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது. கள ஆய்வின் போது, பல்வேறு இடங்களில் சட்டவிரோத மற்றும் கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை தெளிவாகக் கண்டறியப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் அகழப்பட்டதுடன், அனுமதி வழங்கப்படாத பகுதிகளிலும் இயந்திரங்களை பயன்படுத்தி அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் விளைவாக நில அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மரங்களின் வேர்கள் வெளிப்பட்டு அவை சரிந்து விழும் அபாய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, ஆற்றங்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயங்கள் அதிகரித்துள்ளன. மேலும், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அண்மையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மனிதப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கள ஆய்வு அறிக்கைகளுக்கும் வழங்கப்பட்ட அனுமதிகளுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் காணப்பட்டதுடன், தொடர்ச்சியான கண்காணிப்புக் குறைபாடுகளும் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில், சட்டவிரோதமாக வழங்கப்பட்ட அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்துச் செய்தல், சேதமடைந்த நிலங்களை மீளமைத்தல், ஆற்றங்கரை மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற பல காத்திரமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது பதிலளித்த புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் மாவட்டப் பொறியியலாளர், தான் மாவட்டத்தில் பதவியேற்பதற்கு முன்னரே சில கள ஆய்வுகள் நடந்ததாகவும், முன்னைய பொறியியலாளரே அந்த அனுமதிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர், இங்குள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை நீங்கள் ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகள் என நினைக்க வேண்டாம். சுற்றறிக்கைகளுக்குள் ஒளிந்துகொண்டு தப்பிக்க முடியும் எனவும் கனவு காண வேண்டாம். இதயசுத்தியுடன் உண்மையைப் பேசுங்கள்; பொறுப்பற்றுக் கதைக்க வேண்டாம், எனக் கடுமையாக எச்சரித்தார்.

தொடர்ந்து ஆளுநர் அவர்கள், ‘இந்த அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி இவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது உறுதியான பின்னர், அவற்றை ஏன் உடனடியாக இரத்துச் செய்யவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்குக் குறித்த பொறியியலாளர், ‘இந்தக் கூட்டத்தில் முடிவெடுப்பதற்காகவே காத்திருந்தேன்’ எனப் பதிலளித்தார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், ‘அனுமதி வழங்கும் போது எவ்வித கலந்தாலோசனையுமின்றித் தன்னிச்சையாக வழங்குகின்றீர்கள்; இரத்துச் செய்வதற்கு மாத்திரம் ஏன் இந்தக் குழுவின் அனுமதியை எதிர்பார்க்கின்றீர்கள்?’ எனத் திருப்பிக் கேட்டார்.

தமது கள ஆய்வின் போது குறித்த மாவட்டப் பொறியியலாளரும் இணைந்திருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய மன்னார் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், ‘அவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றதை நேரில் கண்ட பின்னரும் அனுமதியை இரத்துச் செய்யாமல் இருப்பதன் பின்னணி என்ன?’ என வினவினார். இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டு முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஆளுநர் அறிவித்தார்.

இதன் பின்னர் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

மணல் அகழ்வுக்கான அனுமதிகளை வழங்கும் முன், அனைத்துச் சம்பந்தப்பட்ட துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கள ஆய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மணல் அகழ்வு மற்றும் சேமிப்பு அனுமதிகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

ஜி.பி.எஸ். தரவுகள் மூலம் வளங்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். அகழப்பட்ட மணலைத் திட்டமிட்ட முறையில் பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான விலையை நிர்ணயிக்கத் தொழில்நுட்பக் குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மற்றும் சுற்றாடல் உணர்திறன் மிக்க பகுதிகளில் நீதிமன்ற அனுமதியுடன் மட்டுமே அகழ்வை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட இறுக்கமான கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுத்து விற்பனை செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பின்பற்றப்படும் அதே நடைமுறையை மன்னாரிலும் பின்பற்றிச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

மன்னாரிலிருந்து மணல் கொண்டு செல்லப்படும் மிக முக்கிய வீதிகள் அடையாளப்படுத்தப்பட்டு, அங்கு உடனடியாக சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்த முடிவெடுக்கப்பட்டது.

இறுதியாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்த வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், நான் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பதவிநிலைகளில் பணியாற்றியுள்ளேன். கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் கைதானவர்களை விடுவிப்பதற்காகவே அரசியல்வாதிகள் எங்களை நாடி வந்தனர். ஆனால், நான் வன்னிப் பிராந்தியத்தில் கடமையேற்ற பின்னர் ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் மணல் ஒழுங்குபடுத்தல் தொடர்பில் நடத்திய 4 கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். அவர்கள் இந்த விடயத்துக்கு இவ்வளவு தூரம் தலைமை தாங்கும்போது, நாம் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது கடமையாகும்.

பொலிஸ் அதிகாரிகள் சிலர், அனுமதிப்பத்திரங்களில் கையெழுத்து வைக்கச் சொன்னாலும் அதனைச் செய்யாமல், மாறாகக் கையூட்டு வாங்குகின்றனர். அவ்வாறானவர்கள் தொடர்பில் தற்போது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழலில் ஈடுபடும் எந்தவொரு பொலிஸ் அதிகாரியையும் நான் ஒருபோதும் பாதுகாக்க மாட்டேன். இந்த முறைகேடுகளுக்குத் துணைபோகின்ற பொலிஸ் உத்தியோகத்தர் எந்த மட்டத்தில் இருந்தாலும், அவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன், என உறுதியளித்தார்.

இந்த விசேட கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், மாகாண நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர், நகர சபைத் தவிசாளர், பிரதேச சபைத் தவிசாளர்கள் மற்றும் உரிய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்

முந்தைய செய்தி நேட்டோ நாடுகளின் உதவி குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டார் டொனால்ட் டிரம்ப்
அடுத்த செய்தி கனடியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த 1 டிரில்லியன் டொலர் முதலீட்டு இலக்கு!நிதி நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசில் இருந்து சிறிதரன் எம்.பி யை நீக்க முடியாது – சி.வி.கே. சிவஞானம்

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் பதிவான நில அதிர்வு

ஜனவரி 31, 2026
இலங்கை

இனவாதத்தை ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – மனோ எம்.பி

நவம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?