விமான விபத்துக்கான இரங்கல் செய்தியில் பிரெஞ்சு மொழியைப் புறக்கணித்த விவகாரத்தில், ஏர் கனடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மைக்கேல் ரூசோ பதவி விலக மாட்டார் என்று அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதமர் மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் விடுத்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள ஏர் கனடா நிர்வாகக் குழு, ரூசோவின் தலைமைத்துவத்தில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நியூயார்க் விமான விபத்து என்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விடயம் என்பதால், தனது செய்தியை மிகவும் துல்லியமாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தவே ரூசோ ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று ஏர் கனடா நிறுவனத்தின் ஊடகப்பேச்சாளர் கிறிஸ்டோப் ஹென்னபெல்லே தெரிவித்துள்ளார்.
“இத்தகைய ஒரு உணர்ச்சிமிகு செய்தியை மைக்கேல் ரூசோ தாம் விரும்பிய அளவுக்குத் தெளிவாகக் கூறுவதற்கு, அவரது பிரெஞ்சு மொழித் திறன் இடமளிக்கவில்லை எனவும் அதனாலேயே காணொளியில் பிரெஞ்சு துணைத்தலைப்புகள் (Subtitles) பயன்படுத்தப்பட்டன” எனவும் ஏர் கனடா நிறுவனத்தின் ஊடகப்பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள கியூபெக் மாகாண அரசாங்கம், இது பிரெஞ்சு மொழி பேசும் மக்களைத் தொடர்ச்சியாக அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளது.
குறிப்பாக, விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவரான அன்டோயின் ஃபாரஸ்ட் ஒரு கியூபெக் பிரெஞ்சு இனத்தவர் என்பதால், அவரது குடும்பத்தினருக்கு ஆங்கிலத்தில் இரங்கல் தெரிவிப்பது “மனிதாபிமானமற்றது” என்று பிரதமர் மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.
