அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்வைக்கப்பட்ட அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக அந்நாட்டின் உயர்மட்ட அரசியல்-பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
போர் எப்போது முடிவுக்கு வர வேண்டும் என்பதை ஈரானே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் போர் முடிவுக்கு வருவதற்கான நேரத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானிக்க ஈரான் அனுமதிக்காது அவர் கூறியுள்ளார்.
மேலும் “ஈரான் எப்போது விரும்புகிறதோ மற்றும் அதன் நிபந்தனைகள் எப்போது நிறைவேற்றப்படுகிறதோ, அப்போதுதான் போர் முடிவுக்கு வரும்” என அந்த அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எதிரிக்கு பலத்த அடிகளைத் தொடர்ந்து கொடுத்து, ஈரானின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தற்காப்பு நடவடிக்கைகள் தொடரும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வோஷிங்டன் பல்வேறு இராஜதந்திர வழிகளில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும், அவை யதார்த்தத்திற்குப் புறம்பானவை என ஈரான் கருதுகின்றது.
2025 ஆம் ஆண்டு வசந்த காலம் மற்றும் குளிர்காலத்தில் நடைபெற்ற முந்தைய பேச்சுவார்த்தைகளை ஈரானிய அதிகாரி “ஏமாற்று வேலை” என்று விமர்சித்துள்ளார்.
அந்த சமயங்களில் அமெரிக்காவிற்கு உண்மையான பேச்சுவார்த்தையில் ஈடுபாடு இருக்கவில்லை என்றும், மாறாக ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் போரை நிறுத்த வேண்டுமானால் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்
எதிரி தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படும் அனைத்து வகையான தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இஸ்லாமியக் குடியரசு மீது மீண்டும் ஒரு போர் திணிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த முறையான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்பட வேண்டும்.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து எதிர்ப்பு குழுக்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போர்கள் அனைத்து முனைகளிலும் நிறுத்தப்பட வேண்டும்.
ஹோர்முஸ் நீரிணையின் மீது ஈரானுக்குள்ள இறையாண்மை மற்றும் அதிகாரத்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும்.
இந்த சட்டவிரோதப் போர் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி, அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, ஈரானிய புரட்சியின் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது.
இதற்குப் பதிலடியாக, ஈரானியப் படைகள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ இலக்குகள் மீது இதுவரை சுமார் 80 கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஈரானின் அனைத்து நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறாது என அந்த அதிகாரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


