கியூபெக் மாகாணத்தின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் (Budget) எதிர்வரும் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் (Eric Girard) இதனை அறிவித்துள்ளார். அடுத்த ஏழு மாதங்களில் கியூபெக் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வரவு-செலவுத் திட்டத்தை நிதானமான மற்றும் இலக்கு சார்ந்த (Sober and Targeted) ஒன்றாக நிதியமைச்சர் வர்ணித்துள்ளார். சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதே, கியூபெக் அரசின் முதல் முன்னுரிமை என்று ஜிரார்ட் கூறினார்.
இதேவேளை, கியூபெக் மாகாணத்தின் நிதி நிலைமை கடந்த ஆண்டை விடச் சற்று முன்னேற்றம் கண்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் 13.6 பில்லியன் டொலராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிதிப்பற்றாக்குறை, தற்போது 12.4 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
நீண்ட கால அடிப்படையில் கியூபெக் மாகாணத்தின் வரவு மற்றும் செலவைச் சமநிலைப்படுத்தும் (Balanced Budget) முயற்சியில், தற்போதைய அரசு உறுதியாக உள்ளது.
