சீனாவுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தைப் பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்துள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான வரி குறைக்கப்பட்டு, அதற்கு ஈடாகக் கனடிய விவசாயப் பொருட்களுக்குச் சீனாவில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பெய்ஜிங்கில் நடத்திய இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அதிரடி முடிவை மார்க் கார்னி அறிவித்தார்.
2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடிய பிரதமர் ஒருவர் சீனா சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை சீன வாகனங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 100% வரியைக் கனடா ரத்து செய்துள்ளது.
இனி ஆண்டுக்கு 49,000 வாகனங்கள் வெறும் 6.1% வரி விகிதத்தில் கனடாவுக்குள் இறக்குமதி செய்யப்படலாம். பதிலுக்கு, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கனோலா (Canola) விதைகள் மீதான வரியைச் சீனா 84%-லிருந்து 15% ஆகக் குறைத்துள்ளது.
கனடிய நண்டுகள் மற்றும் இறால்கள் மீதான வரி தடைகளையும் சீனா நீக்க ஒப்புக்கொண்டுள்ளது.இதன் மூலம் கனடாவுக்கு சுமார் $3 billion டொலர், கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீனாவுக்கு எதிராகக் கடும் வரி விதிப்புகளைப் பின்பற்றி வரும் நிலையில், கனடா எடுத்துள்ள இந்த முடிவு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை விடச் சீனா தற்போது கனடாவுக்கு ஒரு நம்பிக்கையான வர்த்தகப் பங்காளராக உள்ளது," என்று பிரதமர் கார்னி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கனடியப் பயணிகள் இனி சீனா செல்வதற்கு விசா (Visa) தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, டொராண்டோ உள்ளிட்ட வாகனத் தொழிற்சாலைகள் நிறைந்த மாகாணமான ஒண்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட், சீனாவின் மலிவான வாகனங்கள் கனடியத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
