நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தரவுத் திருட்டாகக் (Data Breach) கருதப்படும் ‘டெஸ்ஜார்டின்ஸ்’ (Desjardins) விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி ஜுவான் பாப்லோ செரானோ (Juan Pablo Serrano), ஸ்பெயினில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கியூபெக் மாகாணப் பொலீஸ், இன்டர்போல் (Interpol) மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ரகசிய நடவடிக்கையில் அவர் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019-ஆம் ஆண்டு கனடாவின் பிரபல நிதி நிறுவனமான டெஸ்ஜார்டின்ஸ் குழுமத்திலிருந்து சுமார் 97 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டன.
இந்த விபரங்களைப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்தச் சதித்திட்டத்தில் ஜுவான் பாப்லோ செரானோவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறி, 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவரைப் பொலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
மக்களின் விபரங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்தமை, திருடப்பட்ட தகவல்களை ‘டார்க் வெப்’ (Dark Web) மூலம் மற்றவர்களுக்கு விற்பனை செய்தமை முதலான குற்றச்சாட்டுகள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

