கியூபெக் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பெயர் சொல்லி அழைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களுக்கு, இந்த புதிய கண்ணியமான நடத்தை விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இந்த புதிய ஒழுக்க விதிகள் அடங்கிய ஆவணத்தில் பெற்றோர்கள் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தில் கையொப்பமிடுவதனூடாக, பள்ளியின் விதிகளைத் தங்கள் பிள்ளைகள் மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் உறுதியளிக்கின்றனர். மேலும், பள்ளிகளின் நடத்தை விதிகளில் ஆண் மற்றும் பெண் சமம் என்ற அம்சம் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பதும்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் மாணவர்களுக்குப் பள்ளிகள் தன்னிச்சையாகத் தண்டனைகளை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ”பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறையைக் குறைக்கவும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு முறையான இடைவெளியைப் பராமரிக்கவும் இந்த விதிகள் உதவும் என, கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல் குறிப்பிட்டுள்ளார்.
