நாட்டின் அனைத்து மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து, பல பொருட்களின் மீதான மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
அமெரிக்காவின் சமீபத்திய வர்த்தக வரிகள் அச்சுறுத்தல்களின் வெளிச்சத்தில், உள்நாட்டு வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதும், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் கனடாவின் பொருளாதாரத்தைக் குறைப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
Canadian Mutual Recognition Agreement என்று அழைக்கப்படும் இந்த பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் ஆனது, ஒரு உற்பத்திப்பொருள் ஒரு மாகாணத்தின் அல்லது பிரதேசத்தின் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கினால், அது கூடுதல் அங்கீகாரங்கள், சோதனைகள் அல்லது லேபிள்கள் இல்லாமல் நாடு முழுவதும் தடையின்றி விற்கப்படலாம் என்ற வசதியை அளிக்கின்றது.
இந்த ஒப்பந்தத்தில் ஆடை, பொம்மைகள், வாகனங்கள், சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள் முதலான ஆயிரக்கணக்கான பொருட்கள் உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்தம் வணிக சமூகத்தால் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும், உணவு மற்றும் மதுபானம் போன்ற சில உற்பத்தித் துறைகளுக்கு இந்த வசதி அளிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
