திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் கிதுல்வுதுவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மொரவெவயிலிருந்து தம்பலகமுவ நோக்கிச் சென்ற பேருந்துடனேயே இந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
ஹொரபத்தன, கப்புகொல்ல பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் அஹமட் எனும் 19 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


