இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம் 3 எம் 5 ராக்கெட் இன்று (நவ., 02) மாலை 5.26 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோ, 4,410 கிலோ எடை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இதற்கான 24 மணிநேர கவுன்டவுன் நேற்று நவ.,01) மாலை துவங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (நவ., 02) மாலை 5.26 மணிக்கு எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதன் பிறகு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது எனக்கூறினார்.
இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் முக்கிய முன்னேற்றமாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை இன்று விண்ணில் ஏவியுள்ளது.
ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள், இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன், இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி, இஸ்ரோ தலைவர் நாராயணன் தலைமையில் விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அத்துடன், சிஎம்எஸ்-3 செயற்கைக்கோளின் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் சமர்ப்பித்து வேண்டியதும் குறிப்பிடத்தக்கது.
