இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது.
நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பபாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த கட்ட அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என அகழ்வாய்வு நிபுணர்கள் கூறுகின்றனர்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்று முன்தினம் , யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது.”
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் அகழ்வாய்வு நிபுணர்களுடன் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியைப் பார்வையிட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
