கனடாவில் ஆண்டுக்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றி அமைக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஒரு புதிய சட்ட மசோதாவை ஒரு லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஒட்டாவாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேரி-பிரான்ஸ் லலோண்டே, “நேர மாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் ஒரு தனிநபர் மசோதாவை (private member’s bill) முன்வைப்பதற்குத் திட்டமிட்டுள்ளார்.
இந்த மசோதா நேரடியாக நேர மாற்றத்தை நீக்குவதற்கு கோரவில்லை எனினும், நாடு முழுவதும் ஒரே கடிகார நேரத்தை நிரந்தரமாக்குவது குறித்து முடிவெடுப்பதற்காக மத்திய அரசாங்கம் ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்று கோருகிறது.
பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் வசந்த காலத்தில் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தி, இலையுதிர்காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


