நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமல்ல என்றும் கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயல்முறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சில மருந்துகள் தனியார் சந்தைகள், மருந்தகங்கள் மற்றும் திறந்தவெளியில் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துப் பதிவின் போது வரம்பற்ற விலைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் அதற்கான பதிவை நாம் அனுமதிப்பதில்லை.
தெற்காசிய நாடுகளில் தற்போதைய சந்தை நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதனை விரும்பாதவர்கள் மருந்துகளை விநியோகிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி மனுக் கோரிக்கை செய்யும் பொறுப்பு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் சுமார் 80 முதல் 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
