கியூபெக் மாகாணத்தில் கடந்த ஆண்டு, சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறாமலேயே அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.மொண்ட்ரியல் பொருளாதார நிறுவகம் (Montreal Economic Institute) வெளியிட்ட அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.
இந்த எண்ணிக்கை, அந்த ஆண்டு கியூபெக் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு வருகை தந்த மொத்த நோயாளிகளில் 11% ஆகும்.
இது கனடாவின் தேசிய சராசரியான 7%-ஐ விட, மிக அதிகமாகும்.
இந்த தகவல், நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறைகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் திரட்டப்பட்டுள்ளது.
பல காரணங்களுக்காக, மக்கள் ஐந்து, ஆறு, ஏழு மணிநேரம் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருக்க முடியாமல் வெளியேறுகிறார்கள் என, மொண்ட்ரியல் பொருளாதார நிறுவனத்தின் தகவல் தொடர்பு துணைத் தலைவர் ரெனோட் பிராசார்ட் தெரிவித்துள்ளார்.
மொண்ட்ரியல் இருதய நிறுவனத்தின் அவசர சிகிச்சை மருத்துவர் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் கில்பர்ட் பௌச்சர், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வளங்களின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
