பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை இன்று மாலை 4.00 மணி முதல் மேற்கொள்ள இணங்கியுள்ளதாக, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தபால் ஊழியர்களுக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர், அமைச்சர் ஊடகங்களுக்கு இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தன.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
