கியூபெக்கில் மே மாதம் இயற்றப்பட்ட புதிய மாகாணச் சட்டம், தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என இரண்டு முக்கிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தம் ஒன்று பொதுமக்களுக்கு “கடுமையான அல்லது சரிசெய்ய முடியாத” பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்டால், அது தொடர்பிலான கட்டாயத் தீர்ப்பொன்றை விதிப்பதற்கு இந்தச் சட்டமானது கியூபெக் தொழிலாளர் அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கிறது.
கியூபெக்கின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டமைப்பான எஃப்.டி.க்யூ-வின் தலைவர் மகாலி பிக்கார்ட் மற்றும் பொதுத்துறை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சி.எஸ்.க்யூ-வின் தலைவர் எரிக் ஜிங்ராஸ் ஆகியோர், இந்தச் சட்டம் முதலாளிகள் வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்த வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.
அரசாங்கம் தலையிடும் வரை காத்திருக்கும் முதலாளிகள், வேலைநிறுத்தம் தீவிரமடைந்த பிறகு அரசின் தலையீட்டை நாடக்கூடும் என அவர்கள் நம்புகின்றனர்.
அண்மையில் கனடா மத்திய அரசு ஏர் கனடா விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இதேபோன்ற ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி கட்டாயத் தீர்ப்பை விதித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையுடன் கியூபெக் சட்டத்தை ஒப்பிட்டுப் பேசிய பிக்கார்ட், “இது முதலாளிகளின் பேச்சுவார்த்தை உத்தியாக மாறி வருவதாக விமர்சித்துள்ளார்.
முதலாளிகள் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்திவிட்டு, பின்னர் தவறான சாக்குப்போக்குகளைச் சொல்லி அரசின் தலையீட்டைக் கோருகிறார்கள் எனவும் இதுவே கியூபெக்கிலும் நடக்கப்போவதாக தாம் கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
