பேட்டில் ரிவர்-கரோஃபுட் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொலிவர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
286 வாக்குச் சாவடிகளில், 195 வாக்குச் சாவடிகளின் முடிவுகள் வெளியானபோது, பியர் பொலிவர் 21,472 வாக்குகளுடன் முதலிடத்தில் இருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக, சுயேச்சை வேட்பாளர் பொன்னி கிரிச்லி 2,745 வாக்குகளையும், லிபரல் கட்சியின் டார்சி ஸ்பேடி 1,265 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்தலில், ஒட்டாவா-கார்ல்டன் தொகுதியில் தனது நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை லிபரல் வேட்பாளரிடம் இழந்த பொலிவர், மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்புவதற்காக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
அவருக்காக, பேட்டில் ரிவர்-கரோஃபுட் தொகுதியின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேமியன் குரெக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மார்க் கார்னி இந்த இடைத்தேர்தலை ஜூன் மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்றைய வெற்றிக்குப் பிறகு தனது ஆதரவாளர்களிடம் பேசிய பொலிவர், “நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து நேரடியாக வந்து, 56,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பிராந்தியத்தில் பயணித்து, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது சிலருக்கு கடினமான பணியாகத் தோன்றியிருக்கலாம். ஆனால், எனக்கு இது ஒரு பாக்கியம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், பேட்டில் ரிவர்-கரோஃபுட் நாடாளுமன்றத் தொகுதியில் வாழும் பொது அறிவு கொண்டவர்கள், நேர்மையானவர்கள்” என்றும், அவர்களிடம் தான் “பணிவு, கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் அன்பு” போன்ற பல பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் பொலிவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தத் தொகுதி, கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
