ரணிலின் குற்றச்சாட்டுக்கு பிரதியமைச்சர் எரங்க குணசேகர பதிலடி!இளைஞர் கழகங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்துக்களுக்கு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர பதிலளித்துள்ளார்.
இளைஞர் கழகங்களை தற்போதைய அரசாங்கம், அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என ரணில் விக்ரமசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பிரதியமைச்சர எரங்க குணசேகர வழங்கியுள்ள பதிலில், முந்தைய அரசாங்கங்களே தேசிய இளைஞர் மன்றத்தையும் இளைஞர் கழகங்களையும் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய இளைஞர் மன்றத்திலிருந்து பல மில்லியன் ரூபாய்கள் ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்துக்காக செலவிடப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிரசாரத்துடன் இணைந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ரூ. 536 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், கண்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் ரூ. 68 மில்லியன் மோசடி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னைய அரசாங்கங்களின் கீழ் இளைஞர் கழகங்கள் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் செயலாளராக தரிந்து நவீன் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், பாலித ரங்கே பண்டாரவால் அவர் கலகெதரவுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சம்மேளனத்துக்கான நிதி, அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு மாற்றப்பட்டது.
அரசாங்கம் தற்போது 12,000 க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இளைஞர் சங்கங்களை நிறுவியுள்ளதுடன் மாவட்ட மாநாடுகளை நடத்தியதுடன், எதிர்வரும் 12 ஆம் திகதி தேசிய இளைஞர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.
32 ஆண்டுகளின் பின்னர் இத்தகைய நிகழ்வு நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை ரணில் விக்ரமசிங்க நாடுவதாகவும், சில அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, ரணில் விக்ரமசிங்க தமது உரையில், அரசியல் கட்சிகள் இளைஞர் கழகங்களை கட்டுப்பாட்டில் எடுப்பதைத் தடுக்குமாறு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை வலியுறுத்தினார்.
இலங்கையில் இளைஞர் கழகங்களின் வகிபாகம் மற்றும் சுதந்திரம் குறித்த நடந்து வரும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் அவரது இந்த உரை வெளியிடப்பட்டது.
