கனடிய இராணுவப் படைவீரர்கள் சிலர், ஒரு தனிப்பட்ட ஃபேஸ்புக் குழுவில் செயற்பட்ட விதம் தொடர்பில், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
“ப்ளூ ஹேக்கிள் மாஃபியா” (Blue Hackle Mafia) என்ற பெயரில் இயங்கி வந்த ஒரு தனிப்பட்ட ஃபேஸ்புக் குழுவில் “இனவெறி, பெண்கள் வெறுப்பு, ஓரினச்சேர்க்கை வெறுப்பு மற்றும் யூதர்களுக்கு எதிரான” கருத்துகளையும் படங்களையும் அந்த இராணுவ படைவீரர்கள் பகிர்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபேஸ்புக் குழுவின் உள்ளடக்கத்தை “அபாயகரமானது” என்று கனடாவின் தலைமை இராணுவ அதிகாரி லெப்டினன்ட்-ஜெனரல் மைக் ரைட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த ஃபேஸ்புக் குழுவில் ஈடுபட்டுள்ள கனடிய இராணுவ உறுப்பினர்கள் உடனடியாக, அதிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கனடிய ஆயுதப்படைகளில் தீவிரவாதக் கருத்துகளைக் கொண்ட படைவீரர்களைக் கையாளும் திறனை மேம்படுத்துவதற்கான அழுத்தங்களுக்கு மத்தியில், இந்த விசாரணை நடைபெறுகிறது.
“ப்ளூ ஹேக்கிள் மாஃபியா” குழு குறித்த புகார்கள் முதலில் ஒட்டாவாவில் உள்ள இராணுவ காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டன.
பின்னர், இது ஒரு ஒழுங்குமுறை விசாரணைக்காக சம்பந்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இராணுவ காவல்துறையினர் ஜூன் 27 அன்று தங்கள் விசாரணையை மீண்டும் தொடங்கினர்.
கனடியப் படைகளின் Provost Marshal அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணையின் நேர்மையைப் பாதுகாக்க இத்தருணத்தில் மேலதிக தகவல்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.