சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நிறுத்தத்தையடுத்து ஈரான் அணு ஆயுத திட்டங்களை சீரமைத்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
இதனிடையே, ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டார்.
ஈரான் பாராளுமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில், சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ் கூறியதாவது; ஈரான் தனது போக்கை மாற்றி, அமைதி மற்றும் செழிப்பின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் இந்த நேரத்தில், அணுசக்தி முகாமையுடனான ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வது ஏற்க முடியாதது. ஈரான் மேலும் தாமதமின்றி, முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
அணுகுண்டுகள் இல்லாத ஒரே நாடாக, 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்த நாடு ஈரான் தான். ஈரான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் தேவைப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் முழுமையாக பின்பற்ற வேண்டும், எனக் கூறினார்.