பென்சில்வேனியா பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையின்படி திருநங்கை வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டும், அவர்கள் பெற்ற சம்பியன் சாதனைகள் இரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல நீச்சல் வீராங்கனையான லியா தாமஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்காக பெண்கள் பிரிவில் போட்டியிட்டு வந்தார். ஆணாகப் பிறந்து, 2018ல் தன்னை திருநங்கையாக வெளிப்படுத்திய இவர், 2022ல் தேசிய அளவிலான கல்லூரி நீச்சல் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றார். இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் திருநங்கை வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையையும் பெற்றார்.
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், திருநங்கை வீராங்கனைகள் பெண்கள் பிரிவில் போட்டியிட அனுமதிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான அரசு நிதியை இரத்து செய்யப்படும் என்று பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்கக் கல்வித் துறையுடன் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பல்கலைக்கழகத்தின் பெண்கள் விளையாட்டுப் பிரிவில் திருநங்கை வீராங்கனைகள் பங்கேற்கத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், லியா தாமஸ் படைத்த அனைத்து சாதனைகளும் பல்கலைக்கழகப் பதிவேடுகளில் இருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.