அல்பர்ட்டா மாகாணத்தில் பொதுமக்களின் கருத்துகளை அறியும், பொது வாக்கெடுப்புகளுக்கான விதிகள் தளர்த்தப்படவுள்ளன.
இந்த விதிகள் தளர்த்தப்படுவதன் மூலம், கனடாவில் இருந்து அல்பர்ட்டா பிரிந்து தனியரசாக மாறுவது தொடர்பில் அல்பர்ட்டா மக்களிடம் கருத்துக் கேட்கும் ஒரு வாக்கெடுப்பும் நடைபெற முடியும் என்கிற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த பொதுவாக்கெடுப்புகளை நடத்தும் அதிகாரத்தை அல்பர்ட்டா மாகாணத்துக்கான தேர்தல் திணைக்களம் கொண்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூலை நான்காம் திகதி முதல், பொதுமக்களின் கருத்துகளை அறியும் வாக்கெடுப்புகளுக்கான விதிகள் அல்பர்ட்டா மாகாணத்தில் தளர்த்தப்படவுள்ளன.
இந்தப் புதிய விதிகள் பெரும் அரசியல் சர்ச்சையையும், மாகாணத்தில் பிளவையும் உருவாக்கியுள்ளன.
பொது வாக்கெடுப்புகளைத் தொடங்குவதற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையான மக்களின் கையொப்பங்கள் தேவை என்னும் நிலை தற்போது உள்ளது.
அல்பர்ட்டா மாகாணத்தின் முதல்வரான டேனியல் ஸ்மித்தின் ஐக்கிய பழமைவாத கட்சி அரசாங்கம், இந்த பொது வாக்கெடுப்புகளைத் தொடங்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச கையொப்பங்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக குறைக்கிறது.
புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் அதே நாளில், பொது வாக்கெடுப்பு ஒன்றைக் கோரி, அல்பர்ட்டா மாகாணத்துக்கான தேர்தல் திணைக்களத்திடம் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக, ல்பர்ட்டாவின் சுதந்திரத்தை ஊக்குவித்து வரும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ‘அல்பர்ட்டா செழிப்புத் திட்டம்’ (Alberta Prosperity Project) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மிட்ச் சில்வெஸ்டர் தெரிவித்துள்ளார்.
அவர் தலைமையிலான குழு, 120 நாட்களுக்குள் 177,000 கையொப்பங்களைச் சேகரித்து, “அல்பர்ட்டா மாகாணம் கனடாவின் ஒரு மாகாணமாக இல்லாமல் போய், ஒரு இறைமையுள்ள நாடாக மாறுவதற்குச் சம்மதிக்கிறீர்களா?” என்ற கேள்வியை வாக்காளர்கள் முன் வைக்கும் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடைபெற வைப்பதை, தனது இலக்காகக் கொண்டுள்ளது.
கனேடிய மத்திய அரசின் கொள்கைகள் அல்பர்ட்டா மாகாணத்தின் வளங்களை பல ஆண்டுகளாக வேறு இடங்களுக்கு இட்டுச் சென்றதால், பிரதமர் மார்க் கார்னி மீதான நம்பிக்கை அல்பர்ட்டா மக்களிடையே குறைந்து வருவதாகவும், எனவே, இச்சூழ்நிலையில் பிரிவினைக்கான வாக்கெடுப்பு நடந்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் சில்வெஸ்டர் நம்புகிறார்.
இதேவேளை, அல்பர்ட்டாவின் முன்னாள் முற்போக்கு பழமைவாத கட்சி அரசாங்கத்தின் துணை முதல்வரான தாமஸ் லுகாஸுக், இந்த பிரிவினை முயற்சிகளைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தாமஸ் லுகாஸுக் சமர்ப்பித்த “அல்பர்ட்டா ஃபாரெவர் கனடா” (Alberta Forever Canada) என்ற மனுவுக்கு, நேற்றைய தினம் அல்பர்ட்டா மாகாணத்துக்கான தேர்தல் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.
”அல்பர்ட்டாவின் சட்டத்தின்படி, ஒரே பிரச்சினை குறித்து இரண்டு வெவ்வேறு பொதுவாக்கெடுப்புகளை நடத்தக் கோருகின்ற போட்டித் தன்மையுள்ள மனுக்கள் அனுமதிக்கப்பட முடியாதவை” என்று லுகாஸுக் தெரிவித்துள்ளார்.
இந்த மனு, அல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் என்ற மாகாணத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையை வலியுறுத்தும் வகையிலான, பொதுவாக்கெடுப்பைக் கோருகின்றது.
அல்பர்ட்டா மாகாணமானது, கனடாவுடனான தனது உறவைத் துண்டிப்பது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடக்குமானால், அது கனடா முன்னெப்போதும் கண்டிராத ஒரு சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.