கிண்ணியா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், திருகோணமலை துறைமுகத்தில் பயணிகளுக்கு போலியான மருத்துவ அறிக்கைகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, பொது முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கப்பல்களில் இருந்து இறங்கும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களுக்கு மருத்துவ அனுமதி அறிக்கைகளை வழங்குவது இந்த வைத்தியரின் பொறுப்பாக இருந்தது.
ஒவ்வொரு அறிக்கைக்கும் அவருக்கு 300 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக வழங்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், விசாரணைகளில், அவர் எந்தவொரு உண்மையான மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் இந்த அறிக்கைகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த போலியான ஆவணங்களுக்காக அவர் பணம் பெற்றதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சந்தேகநபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.