தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள நீல மஞ்சள் நிறம் கொண்ட பஞ்சவர்ணக் கிளியொன்று கடந்த 4 ஆம் திகதி இரவு திருடப்பட்டதாகக் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கிளி வைக்கப்பட்டுள்ள கூண்டில் நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோகள் 30 உள்ளதுடன் அவற்றில் ஒன்றே திருடப்பட்டுள்ளது.
கூண்டின் பராமரிப்பாளர் மறுநாள் காலை பணிக்காக சாவியுடன் கூண்டைத் திறக்கச் சென்றபோது அதைப் பாதுகாக்க நிறுவப்பட்ட பாதுகாப்பு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கவனித்து, பின்னர் இது குறித்து மிருகக்காட்சி சாலையின் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிருகக்காட்சிசாலையில் விலங்கொன்று காணாமற்போனால் உயர் அதிகாரியே காவல்துறையில் முறைப்பாடு செய்யவேண்டும்.
ஆனால் கிளி காணாமல் போனமை தொடர்பில் விலங்குகள் குறித்த அனுபவமற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன