விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இருந்து கசிப்பு உற்பத்தி செய்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரட்டை வாய்க்கால் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற போது புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹெரத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் .பி.ஆர் ஹேரத் தலைமையிலான பொலிஸாரினால் புதுக்குடியிருப்பு பகுதியில் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற இளைஞர்களை மறிக்க முற்பட்டபோது தப்பிச்சென்றுள்ளனர்.
தப்பி சென்ற இளைஞர்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் துரத்திச்சென்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வைத்து 110,000 மில்லிலீற்றர் பொதி செய்யப்பட்ட கசிப்புடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு கசிப்பு கடத்த பயன்படுத்தப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விசுவமடு புன்னை நீராவி பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 19, 27 வயதுடைய சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விசாரணைக்கு பின்னர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
