கிண்ணியா பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், லஞ்ச ஊழல் குற்ற தடுப்பு பிரிவினரால் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா – புகாரி சந்தியில் வைத்து, நபர் ஒருவரிடம், 10000 ரூபாய் இலஞ்சம்பெற முற்பட்ட போதே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார் என இலஞ்ச ஊழல் குற்ற தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை – அபேபுர பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த 27ஆம் திகதி கிண்ணியா பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஒருவரை, இவர் தடுத்து, விசாரித்துள்ளார்.
இதன்போது, தன்னிடம் வாகன அனுமதி பத்திரமோ, சாரதி அனுமதி பத்திரமோ இல்லை என்று குறித்த நபர் கூறியுள்ள நிலையில், அவரது அடையாள அட்டையை வாங்கிய பின்னர், தனது தொலைப்பேசி இலக்கத்தை பொலிஸார் வழங்கி, தேசிய அடையாள அட்டை பெற வேண்டுமானால் தன்னோடு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்படி, குறித்த நபர் தொலைபேசி மூலம் உரையாடிய போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 10000 ரூபாய் கப்பமாக கோரியதாகவும், அவற்றை கிண்ணியா புகாரி சந்திக்கு கொண்டு வருமாறும் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் கேட்டுள்ளார்.
இதற்கு இணங்க, குறித்த நபர் இலஞ்ச ஊழல் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுச் செய்துவிட்டு, அவர குறிப்பிட்ட இடத்துக்கு 10000 ரூபாய் பணத்தோடு சென்று, பொலிசாரிடம் பணத்தை கொடுக்கும் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.