மன்னர் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் கனடாவிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, ஒட்டாவாவை வந்தடைந்தனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் கனடாவை, அமெரிக்காவின் 51வது மாகாணம் என குறிப்பிட்ட கருத்துக்களுக்குப் பிறகு நிகழ்ந்துவரும் இந்த அரசப் பயணம் ஆனது, கனடாவின் இறைமையை வலியுறுத்தும் நோக்கில், முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மார்க் கார்னியின் வேண்டுகோளின் பேரிலேயே, மன்னருடைய
இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவில் தரையிறங்கிய மன்னர் மற்றும் ராணியை, கனடாவின் பிரதமர் கார்னி, கவர்னர் ஜெனரல் மேரி சைமன், பழங்குடி தலைவர்கள் மற்றும் ஒரு
இராணுவ இசைக்குழுவினர் முதலானோர் மரியாதை செலுத்தி வரவேற்றனர். பின்னர் ஒட்டாவா நகரைப் பார்வையிட்ட அரச தம்பதியினர், லான்ஸ்டவுன்
பூங்காவில் 1,000க்கும் மேற்பட்ட நல்விரும்பிகளைச் சந்தித்தனர். அதன்பிறகு, கனடாவில் மன்னருக்கான உத்தியோகபூர்வ இல்லமான ரிடோ
ஹால் (Rideau Hall) நோக்கிச் சென்றனர். கனடாவுக்கான தமது விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், ரிடோ ஹால் மாளிகையின் வளாகத்தில், மன்னர் சார்ள்ஸ் ஒரு நீல நிற பீச் (blue beech) மரக்கன்றை நட்டார். இந்நிகழ்வின் போது நூற்றுக்கணக்கான கனடிய அரச ஆதரவாளர்கள், பிரதமர் கார்னி, கவர்னர் ஜெனரல் சைமன் மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர், மன்னர் சார்ள்ஸ், கனடாவின் 13 மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை இந்த மரக்கன்று மீது
தூவினார். இதனையடுத்து, மன்னர் சார்ள்ஸ், தமது பிரதிநிதியாக கனடாவின் செயற்படும் கவர்னர் ஜெனரல் மேரி சைமனுடன் ரிடோ ஹால் மாளிகையின்
உள்ளே 20 நிமிட தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். இதேவேளை, கனடாவின் கிங்ஸ் பிரைவி கவுன்சில் எனப்படும் உயர்மட்டப் பேரவையின் உறுப்பினராக, ராணி கமிலா பதவியேற்றார்.
இப்பேரவையானது நாட்டிற்கு முக்கியமான விஷயங்களில் மன்னருக்கு ஆலோசனை வழங்கும் ஓர் அமைப்பாகும். மன்னர் சார்ள்ஸ் தற்போது கனடாவுக்கு மேற்கொண்டுள்ள அரசப் பயணத்தின் முக்கிய நிகழ்வு இன்று நடைபெறும் என, ஒட்டாவாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்தலின் பின்னர் கனேடிய நாடாளுமன்றம் முதன்முதலாக கூடவுள்ளநிலையில், அதன் சிம்மாசன உரையை மன்னர் சார்ள்ஸ் ஆற்றவுள்ளார்.
இந்த உரை அரசாங்கத்தின் இலக்குகளையும் அவற்றை அடைவதற்கான திட்டங்களையும் கோடிட்டுக் காட்டும் என்பது சுட்டிக்காட்டத் தக்கது.