ஏயார் கனடா நிறுவனம் பயணிகளுக்கு 10 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. விமானக் கட்டணச்சீட்டுகளுக்கு விளம்பரப்படுத்தப்பட்ட விலையை விட, ஏயார் கனடா நிறுவனம் அதிக கட்டணம் வசூலித்தமை தொடர்பிலேயே, இந்த உத்தரவை கியூபெக் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மாகாண நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை ஏயார் கனடா சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நீதிபதி கூறினார்.
இந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று ஏயார் கனடா நினைத்தது &அறியாமை மற்றும் அலட்சியம்" என்று, அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
ஒரு நுகர்வோர் குழுவும், மொண்ட்ரியலைச் சேர்ந்த ஒருவரும் ஏயார் கனடா நிறுவனம் மீது வழக்குத் தொடுத்தனர். இணையதளத்தில் முதலில் பார்த்த டிக்கெட் விலையை விட வரி மற்றும் கட்டணங்கள் உட்பட $124 அதிகமாக வசூலிக்கப்பட்டதாக அந்த நபர் கூறினார். விமான நிறுவனம் வாடிக்கையாளர்கள் உண்மையான டிக்கெட் விலையை அறிந்து
கொள்வதைத் தடுத்தது என்று பயணிகள் தெரிவித்தனர்.
விமானக் கட்டணங்கள் குறித்து மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.