சஸ்காட்சேவன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் அறிவிக்கப்பட்ட 3.8 சதவீத சராசரி கல்விக் கட்டண உயர்வு குறித்து மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கல்விக் கடன்களை நம்பியிருக்கும் மாணவர்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த உயர்வு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சஸ்காட்சேவன் பல்கலைக்கழக மாணவர் சங்கம் (USSU) தெரிவித்துள்ளது.
வீட்டு வாடகை மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மாணவர்கள் "மிகவும் மோசமான நிலையில்" இருப்பதாக USSU தலைவர் குருனல் சாவ்தா கூறினார். சில சமயங்களில் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்கள் எதிர்கொள்ளும் நிதிச் சவால்களை ஒப்புக்கொண்டாலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை பல்கலைக்கழகம் மேலும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சஸ்காட்சேவன் பல்கலைக்கழக மாணவர் சங்கம் எதிர்பார்க்கின்றது. இதேவேளை, கல்வித் தரத்தைப் பேணவும், அத்தியாவசிய பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டவும் இந்த கல்விக் கட்டண உயர்வு அவசியம் என்று, சஸ்காட்சேவன் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.