நோயாளர் காவு வண்டிக்கான நிரந்தர சாரதியை நியமிக்குமாறு கோரி ஐயன்கன்குளம் கிராம மக்கள் வைத்தியசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஐயன்கன்குளம் பகுதியில் இயங்கி வருகின்ற ஐயன்கன்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் நிரந்தர சாரதியின்மையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து இன்று (19) காலை ஐயன்கன்குளம் வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிந்த வைத்தியசாலை அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கான வசதிகள் குறைவான ஒரு கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கான ஒரே ஒரு வைத்தியசாலையாக இருக்கின்ற காரணத்தினால் இரவு வேலைகளில் ஏற்படுகின்ற திடீர் நோய் நிலைகளுக்கு உடனடியாக மல்லாவி வைத்தியசாலை கொண்டு செல்லக்கூடிய வகையில் நோயாளர் காவுவண்டிக்குரிய சாரதி நிரந்தரமாக அங்கே பணியாற்றுவதில்லை எனவும், நோயாளர்காவு வண்டி இருக்கின்ற போதும் சாரதியின் சாரதி சரியாக பணிக்கு இல்லாத காரணத்தினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் குறைந்த இந்த கிராமத்தில் வைத்தியர் அங்கு தங்கி நின்று மக்களுக்கு சேவை வழங்குகின்ற போதும் நோயாள காவுவண்டி சாரதி இன்மையால் தீவிரமான சிகிச்சைகளுக்காக கொண்டு செல்ல வேண்டிய நோயாளர்கள் இரவு வேளையில் வருகின்ற நோயாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த சாரதி தாங்கள் நினைத்த நேரத்தில் விடுமுறைகளை பெற்றுக் கொள்வதாகவும், தங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இவ்வாறு செய்வதாகவும் எனவே உரிய வகையிலே குறித்த நோயாளர்காவு வண்டி சாரதியை நிரந்தரமாக நியமித்து அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்திலே நோய்வாய்ப்படுகின்ற மக்களுக்கான உரிய சேவையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வடக்கு மாகாண ஆளுநருக்கான ஒரு மகஜரை குறித்த வைத்தியசாலையின் வைத்தியரிடமும் ஐயன்கன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களிடமும் கையளித்துள்ளனர்.